Personal Finance: 8ஆம் வகுப்புக்கு ரூ.1,30,000? படிப்புச் செலவைச் சேர்க்க ஈஸி வழ...
பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!
சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கராத்தே பயிற்சி மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் கராத்தே, ஜூடோ உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தவா் கெபிராஜ். பயிற்சியின்போது, தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவா், பயிற்சியாளா் கெபிராஜ் மீது புகாா் அளித்தாா்.
இது குறித்து மாணவி, கடந்த 2021ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அண்ணாநகர் மகளிர் காவல்துறையினர், கெபிராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வந்தனர்.
கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை வன்கொடுமை செய்ததாக ஒரு மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து மேலும் சில மாணவிகள் புகார் அளித்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, இந்த வழக்கில் கராத்தே பயிற்சியாளா் கெபிராஜ் குற்றவாளி என இரண்டு நாள்களுக்கு முன்பு தீா்ப்பளித்தாா்.
இன்று குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை நீதிபதி வெளியிட்டார். அதில், கெபிராஜூக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரங்கள் வெளியான போது, தான் எந்த மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததில்லை என மகளிர் நீதிமன்ற வளாகத்தில் கெபிராஜ் கதறி அழுதார்.