Personal Finance: 8ஆம் வகுப்புக்கு ரூ.1,30,000? படிப்புச் செலவைச் சேர்க்க ஈஸி வழ...
பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில், 4 நாள்களாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சோப் மாவட்டத்தின், சம்பாஸா பகுதியில் பதுங்கி செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், கடந்த ஆக.7 ஆம் தேதி முதல் ஆக.11 ஆம் தேதி வரை அதிரடி தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம், அந்த 4 நாள்களில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கடந்த ஆக.10 அன்று நள்ளிரவு முதல் ஆக.11 அதிகாலை வரை, சம்பாஸாவில் மேற்கொண்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின்போது 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் அதன் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு, அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கடந்த ஆக.11 ஆம் தேதியன்று இரவு, பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களைச் சுற்றிவளைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!