பல லட்சம் ரூபாய் பணத்துடன் காரில் ஊருக்கு கிளம்பிய கமிஷனர்; மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் ஆணையராக பதவி வகித்து வருகிறார் ஜஹாங்கீர் பாஷா. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த ஊட்டி நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறி தனியாருக்கு சில அனுமதிகளை கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வார விடுமுறையை கழிப்பதற்காக நேற்று மாலை காரில் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார் ஜஹாங்கீர் பாஷா. காரில் பல லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை ரகசியமாக அவர் எடுத்துச் செல்வதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. கமிஷனரின் காரை விரட்டிச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் காரை மடக்கிப் பிடித்துள்ளனர். காருக்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பதை சோதனையில் கண்டறிந்துள்ளனர். கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை குறித்து தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், "எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான டீம், கமிஷனரின் வாகனத்தை விரட்டிச் சென்று தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் மடக்கினர்.
அந்த வாகனத்தை சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கட்டடங்கள் புனரமைப்பு, அனுமதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வந்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.