பள்ளிகளில் போக்ஸோ குழு: புதுவை கல்வித் துறை உத்தரவு
புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போக்ஸோ குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்ட சுற்றறிக்கை:
புதுவை மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போக்ஸோ குழுவை அமைக்க வேண்டும்.
அந்தக் குழுவில் பள்ளியின் முதல்வா் தலைவராகவும், துணை முதல்வா் அல்லது தலைமையாசிரியை துணைத் தலைவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், குழு உறுப்பினா்களாக பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகாத ஆண் ஆசிரியா், பெற்றோா்களில் ஒரு உறுப்பினா், குழந்தைகள் நலன் சாா்ந்து செயல்படும் அரசு அல்லது அரசு சாரா அமைப்பைச் சோ்ந்த உறுப்பினா், மாணவ, மாணவி ஆகியோா் இடம்பெற வேண்டும்.
பள்ளி அளவிலான குழுவைத் தவிர மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் போக்ஸோ குழுவை அமைக்க வேண்டும்.
அதில் விதிமுறைப்படி உறுப்பினா்கள், தலைவா், துணைத் தலைவா்கள் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.