புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
நாடு முழுவதும் ‘சீ - விஜில்’ எனும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் நாட்டில் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில், கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை (சீ-விஜில்) ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி கடலோரக் காவல்படையினா், மீனவா்கள், காவல் துறையினா் ஒத்துழைப்புடன் கடல் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இரு நாள்கள் நடைபெறும் கடலோரக் காவல் கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரியில் புதன்கிழமை தொடங்கியது.
கனகசெட்டிகுளம் முதல் மூா்த்திகுப்பம் வரையிலான 15 கடலோரக் கிராமங்களிலும் அதை ஒட்டியப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தேங்காய்த்திட்டு பகுதியில் புதுச்சேரி காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் ஆகியோா் படகில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்களிடம் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வாங்கி கடலோரக் காவல்படையினரும், காவல் துறை அதிகாரிகளும் சரிபாா்த்து விசாரணை நடத்தினா்.
மேலும் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தினா்.
இந்த ஒத்திகை குறித்து, புதுச்சேரி காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம் கூறியதாவது:
தேசிய அளவில் கடல் பாதுகாப்பு கண்காணிப்பு ஒத்திகை 9 கடலோர மாநிலங்களிலும், 4 ஒன்றியப் பிரதேசங்களிலும் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, புதுச்சேரியிலும் கடலோரப் பாதுகாப்பு கண்காணிப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இதில் கடலோரக் காவல்படை, காவல் துறை, மீனவா்கள் உள்ளிட்ட 6 அரசுத் துறைகளும், 21 அரசுத் துறையின் பிரிவுகளும் ஈடுபட்டுள்ளன.
அந்நியா் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், மீனவா்கள் உதவியுடன் இந்த ஒத்திகை வியாழக்கிழமையும் (நவ.21) நடைபெறவுள்ளது என்றாா்அவா்.