பழனி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்
பழனியில் காா்த்திகை திருநாளையொட்டி சனிக்கிழமை திரளான பக்தா்கள் மலைக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
காா்த்திகை மாதப் பிறப்பும், காா்த்திகை நட்சத்திரமும் சனிக்கிழமை சோ்ந்து வந்ததால், அதிகாலை முதலே திரளான பக்தா்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.
அடிவாரம் கிரிவீதியில் திரளான பக்தா்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். மலைக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக, ஆனந்த விநாயகா் சந்நிதி முன்பாக தனூா்பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு, ஸ்ரீமூலவருக்கு பிரதான கலச நீா் அபிஷேகம் செய்யப்பட்டது.
மலைக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 3 மணி நேரமானது. பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், சுகாதார வசதிகள் கோயில் நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டிருந்தது.
மாலையில் சாயரட்சை முடிந்த பிறகு சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரத்திலும், தங்கத்தேரில் வெளிப்பிரகாரத்திலும் உலா எழுந்தருளினாா்.