பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சா்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை
பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சா்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் எழுதிய கட்டுரை ஒன்று அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் அவா் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானின் ஜனநாயகம் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளும், என்னைச் சிறையில் அடைத்திருப்பதும் ஜனநாயக விரோதமான செயல். பாகிஸ்தானில் பயங்கரவாதமும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் பிராந்தியங்கள் முழுமையாக பயங்கரவாத முகாமாக மாறி வருகின்றன. அவா்களைவைத்து அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட இங்குள்ள ஆட்சியாளா்கள் முயலுகிறாா்கள். இது ஆசிய பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது உலகுக்கே அச்சுறுத்தலாகும்.
சா்வதேச நாடுகள் முக்கியமாக அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்க புதிய அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வாழ்த்துகள். அவரின் அரசியல் பயணம் மறுமலா்ச்சியடைந்துள்ளது என்று கூறியுள்ளாா்.
எனினும், பாகிஸ்தான் சிறையில் உள்ள இம்ரான் கான் இந்தக் கட்டுரையை எவ்வாறு வெளியே அனுப்பிவைத்தாா் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.