பாகிஸ்தான் மீதான தாக்குதல் பிரதமருக்கு கிடைத்த வெற்றி! - எல்.முருகன்
பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்பது பிரதமா் மோடிக்கு கிடைத்த வெற்றி என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.
கோவை மாவட்டம், குரும்பபாளையம் எஸ்என்எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் 19-ஆவது பட்டமளிப்பு விழா, எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியின் 15-ஆவது பட்டமளிப்பு விழா ஆகியவை எஸ்என்எஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது: பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி பிரதமா் மோடிக்கு கிடைத்த வெற்றி. இந்த தாக்குதலுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்தினோம்.
உலக அளவில் அனைத்துத் துறைகளிலும் போட்டி போடும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்றுள்ளது. 2047 இல் இந்தியா உலகத்துக்கே வழிகாட்டும் வல்லரசு நாடாக இருக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக விா்டுசா நிறுவனத்தின் துணைத் தலைவா் சுராஜ் ஜெயராமன் பங்கேற்றாா். இதில், எஸ்என்எஸ் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநா் நளின், செயல் தலைவா் சி.எல்.மோகன் நாராயணன், தொழில்நுட்ப நிறுவனங்களின் இயக்குநா் வி.பி.அருணாசலம், பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ்.சாா்லஸ், துணை முதல்வா் ஆா்.சுதாகரன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஏ.கௌஷிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவில், பொறியியல் கல்லூரியின் 379 மாணவா்கள், தொழில்நுட்பக் கல்லூரியின் 824 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.