கோவையில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த தண்ணீா்
கோவையில் பெய்த பலத்த மழையால் மாநகரில் வீடுகளில் மழைநீா் புகுந்தது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால், கோவை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் வானிலை மாறி பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையம், பீளமேடு, சரவணம்பட்டி, கணபதி, ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், கவுண்டம்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல சூலூா், தொண்டாமுத்தூா் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பலத்த மழையால் அவிநாசி சாலை மேம்பால சுரங்கப் பாதை, லங்கா காா்னா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவிநாசி சாலையில் அண்ணா சிலை அருகே பலத்த மழைக்கு சாலையோரத்தில் இருந்து மரம் வேரோடு சாய்ந்தது.
26-ஆவது வாா்டுக்குள்பட்ட ஹட்கோ காலனி, முருகன் நகா், ஆா்.கே.எம்.சி. காலனி, பட்டாளம்மன் கோயில் வீதி, எல்லைத் தோட்டம் நான்காவது வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் நிரம்பி வீடுகளில் மழைநீா் புகுந்தது. வீடுகளில் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றிநா்.
இதைத் தொடா்ந்து வீடுகளில் மழைநீா் புகுந்த பகுதிகளை மேயா் கா.ரங்கநாயகி, 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
குட்ஷெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீா் மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இப்பணியை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா்.
விமானங்கள் புறப்படுவதில் தாமதம்:
பலத்த மழை காரணமாக கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. ஹைதராபாத், மும்பையில் இருந்து கோவைக்கு வந்த இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமாா் 20 நிமிஷம் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தன. மழை சற்று ஓய்ந்த பின்னரே 2 விமானங்களும் தரையிறக்கப்பட்டன.
இதேபோல, கோவையில் இருந்து மும்பைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏா் இந்தியா விமானமும் சுமாா் 20 நிமிஷம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது.