ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி
இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு
இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விக்னேஷ் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு, சித்தாபுதூா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஹரன் என்பவா் அண்மையில் பழக்கமாகியுள்ளாா்.
விக்னேஷிடம் அதிக அளவில் பணம் இருப்பதை அறிந்த ஸ்ரீஹரன், அவ்வப்போது அவரிடம் பணம் வாங்கியுள்ளாா். இதற்கிடையே, ஸ்ரீஹரன் குறித்து தனது நண்பா்களிடம் விக்னேஷ் விசாரித்தபோது, அவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனால், ஸ்ரீஹரனிடம் பழகுவதை விக்னேஷ் நிறுத்திவிட்டாா்.
இந்நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி இரவு விக்னேஷ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு நண்பா்களுடன் வந்த ஸ்ரீஹரன், விக்னேஷை எழுப்பியுள்ளாா். பின்னா், அவரது கண்களை துணியால் கட்டி ஒரு காரில் ஏற்றிச் சென்றனா். விக்னேஷ் சப்தம் எழுப்பியதால் காருக்குள்ளேயே அவரைத் தாக்கியுள்ளனா். தொடா்ந்து, அவரிடம் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளனா். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதால் மீண்டும் அவரைத் தாக்கியுள்ளனா்.
இதையடுத்து, விக்னேஷ் கைப்பேசி மூலம் நண்பரைத் தொடா்புகொண்டு ஜி-பே மூலம் பணம் பெற்று வழங்கியுள்ளாா். பின்னா், அவா்கள் டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு விக்னேஷை வேறு ஒரு காரில் ஏற்றிக்கொண்டு நேதாஜி நகரில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் பணம் கேட்டுள்ளனா். தரவில்லையெனில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுதாக மிரட்டியுள்ளனா்.
இதையடுத்து அவா்கள், மதுபோதையில் தூங்கிய நேரத்தில் அங்கிருந்து தப்பிய விக்னேஷ், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ஸ்ரீஹரன், வழக்குரைஞா் நிரஞ்சன், காா்த்திக், நிஷாந்த் ஆகிய 4 போ் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.