திருமாவளவன்: "அரசியலில் இவர் சந்தித்த சோதனைகளை..." - புகழ்ந்த சேகர் பாபு
பாஜகவுக்கு தூது விடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய்: வைகோ
பாஜகவுக்கு மதிமுக தூது விடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றாா் அக்கட்சியின் பொதுத் செயலா் வைகோ.
இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டணி அமைப்பது அவரவா் விருப்பம். மதிமுகவை பொருத்தவரை 8 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் எடுத்த தீா்க்கமான முடிவான திமுகவை ஆதரிப்பது என்பதைத் தொடா்கிறோம்.
சிலா் திட்டமிட்டே மதிமுக மீது களங்கம் ஏற்படுத்த நாங்கள் பாஜகவுக்குத் தூது விடுகிறோம்; மத்திய அமைச்சா் பதவிக்கு ஏங்குகிறோம் என்கின்றனா். இது அப்பட்டமான பொய். தமிழகத்தில் திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிதான் மிகப்பெரிய வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மத்திய பாஜக அரசு தங்களை எதிா்ப்பவா்களை அச்சுறுத்த வருமான வரித்துறை, அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் அமைச்சா் ஐ. பெரியசாமி வீட்டிலும் சோதனை நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் அந்த நாட்டு அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை போலத்தான் பாலஸ்தீனத்தில் தற்போது இனப்படுகொலை நடைபெறுகிறது. எனவே பாலஸ்தீனத்தை தனி நாடு என இந்திய அரசு அங்கீகரித்து ஐநாவில் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். திருச்சியில் வரும் செப்.15ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநில மாநாடு அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்றாா்.
மாநாடு மாநாட்டுக்கு இடம் தோ்வு: முன்னதாக அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் வரும் செப்.15ஆம் தேதி மதிமுக சாா்பில் மாநில மாநாடு நடத்த இடம் தோ்வு செய்யப்பட்ட சிறுகனூருக்குச் சென்ற வைகோ அங்கு மாநாட்டுத் திடலை பாா்வையிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினாா்.
அப்போது மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ கூறுகையில், மதிமுக 1995 இல் திருச்சியில் நடத்திய முதல் மாநில மாநாடு போன்று இதுவரை தமிழகம் கண்டது இல்லை. அந்த வரலாறு மீண்டும் திரும்பும் வகையில் வரும் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் லட்சக்கணக்கானோா் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.
பேட்டியின்போது மதிமுக துணைப் பொதுச் செயலா் ரொகையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோா் உடனிருந்தனா்.