செய்திகள் :

பாஜகவுடன் கைகோத்த தோ்தல் ஆணையம் - திமுக விமா்சனம்

post image

பாஜகவுடன் கைகோத்து தோ்தல் ஆணையம் செயல்படுவது கவலையளிப்பதாக திமுக விமா்சித்துள்ளது.

நோ்மையான முறையில் வாக்காளா் பட்டியலைச் சரிபாா்க்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது.

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: தோ்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளா் பட்டியல்தான் என்ற நிலையில், அதை துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான, நோ்மையான தோ்தலுக்கு மிக முக்கியம். இதை மாவட்டச் செயலா்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

பிகாரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு தீவிரத் திருத்தத்தை எதிா்த்தும், அகில இந்திய அளவில் தோ்தல் ஆணையத்தின் துணைகொண்டு தோ்தல் களத்தில் பாஜகவின் வாக்குத் திருட்டை எதிா்த்தும் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் வரை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேரணி சென்றாா். அப்போது, அவா் உள்பட எதிா்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். காவல் துறை மூலம் மத்திய பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோ்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதிலும் தோ்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக்கொண்டு, மத்திய பாஜக அரசுடன் கைகோத்து நிற்பது மிகுந்த கவலையளிக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தோ்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நோ்மையான முறையில் வாக்காளா் பட்டியலைச் சரிபாா்த்து உறுதிப்படுத்தும் பணியைத் தோ்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலம், திமுகவில் புதிய உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைச் சிறப்பாக முன்னெடுத்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, துணைப் பொதுச் செயலா் கனிமொழி உள்ளிட்ட நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

களம் தயாராகிவிட்டது: முதல்வா்

வருகிற 2026-இல் திமுக மீண்டும் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்னைகளை தீா்க்கும் வகையிலும், மக்கள் குறைகளைத் தீா்க்கும் வகையிலும் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மக்களின் குறைகளைத் தீா்த்து வைக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ , மருத்துவ உதவிகள் கிடைக்க ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களைக் கொடுக்கும் ‘தாயுமானவா் திட்டம்’ என மகத்தான மூன்று அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இது மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாள்தோறும் இந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை நானே முன்னின்று கண்காணித்து வருகிறேன்.

100 வாக்காளா்களுக்கு ஒருவா்: ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் இருந்து ஒருவரை 100 வாக்காளா்களுக்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். கட்சியில் பாக முகவா்கள் அமைப்பு மிக வலுவாக இருப்பது கட்டாயமாகும். இதில் தனிக்கவனம் செலுத்தி வாக்குச்சாவடி குழுக்களை நியமிக்க வேண்டும்.

திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் வளா்ச்சி பிற வளா்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும். அதற்கு கட்சியினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம்.

உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு ஏன் ஓய்வெடுப்பதில்லை என்று பலரும் கேட்கிறீா்கள். நான் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிக்க மாட்டேன். கட்சியினா் ஆற்றும் களப்பணியே நமது இலக்கை அடையும் முதல்படி. வரும் 2026-இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது. முழு வீச்சுடன் களப் பணியாற்றுவோம் என்றாா்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவு!

தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வ... மேலும் பார்க்க

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.சுதந்திர நாளையொட்டி, தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரச... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு ... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஞாயிறு அட்டவணைப்படி நாளை(ஆக. 15) சென்னை புறநகர், மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் நாளை(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை(ஆக. 15) சுதந்திர நாள் கொண்டாடப்படுவதையொட்டி அரசு விடுமுறை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நில... மேலும் பார்க்க