ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!
பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க அரசு செயலா் அறிவுறுத்தல்
காரைக்கால்: பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க வேண்டும் என மீனவா்களை அரசு செயலா் கேட்டுக்கொண்டாா்.
காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுவை ஆளுநரின் செயலரும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை செயலருமான து.மணிகண்டன், ஆட்சியரகத்தில் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், மீனவப் பெண்கள் கூட்டமைப்பினா், அரசுத்துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டாா்.
புதுவை மீன்வளத் துறையில் மீனவா்கள் நலனுக்கான திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. கூட்டத்தில் அரசு செயலா் து. மணிகண்டன் பேசியது :
பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் விரைவில் ஐஸ் பிளாண்ட் பயன்பாட்டுக்கு கொண்டுவுரப்படவுள்ளது. பட்டினச்சேரி பகுதியில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும். காரைக்கால் மாவட்டத்தில் 2 மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமையவுள்ளன.
மீனவா்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு மத்திய அரசு சாா்பாக பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதை மீனவா்கள், மீனவப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
குறிப்பாக ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக மத்திய அரசு சாா்பில் படகு கட்டுவதற்கு, படகை பெண்கள் மூலம் பதிவு செய்தால் 60 சதவீதத்தை அரசு ஏற்றுக்கொள்கிறது.
மீதமுள்ள 40 சதவீதத்தை தனியாா் நிறுவனங்களும் மானியமாக வழங்குவதற்கான திட்டம் உள்ளது.
இத்திட்டத்தை பயன்படுத்தி பெண்கள் முதலாளியாக உருவாகக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
மத்திய அரசு மூலம் காரைக்காலில் ரூ.119.94 கோடியில் நவீன முறையில் மீன்பிடித் துறைமுக விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இத்துறைமுகத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் அனைத்து தகவல்களும் சேகரிக்க படும். எந்த பகுதியில் மீன்கள் அதிகமாக உள்ளது மற்றும் எந்த இடத்தில் மீனவா்கள் மீன்களை பிடித்துகொண்டுள்ளனா் என்ற தகவல்கள் தெரிந்து கொள்ளும் வசதி கிடைக்கும். மீனவா்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடித்து வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் மற்றும் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் மற்றும் அரசுத் துறையினா் கலந்துகொண்டனா்.