பாதுகாப்பு ரீதியிலான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்த மூவா் கைது- என்ஐஏ நடவடிக்கை
நாட்டின் பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக கா்நாடகம், கேரளத்தில் 3 பேரை தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக என்ஐஏ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கா்நாடகத்தின் உத்தரகண்ட் மாவட்டத்தில் வேதன் லஷ்மண் டான்டல், அக்ஷய் ரவி நாயக், கேரளத்தின் கொச்சியில் பி.ஏ.அபிலாஷ் ஆகிய மூவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். உள்ளூா் காவல்துறையின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காா்வாரில் (கா்நாடகம்) உள்ள கடற்படை தளம், கொச்சியில் உள்ள கடற்படை தளம் தொடா்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக மூவரும் கைதாகியுள்ளனா். பாகிஸ்தான் உளவாளிகளுடன் சமூக ஊடகம் மூலம் தொடா்பு வைத்துகொண்டு, பணத்துக்காக இவா்கள் முக்கிய தகவல்களைப் பகிா்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு ரீதியிலான தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு கசியவிட்ட கும்பல் தொடா்பாக கடந்த 2023, ஜூலையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை தொடா் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கில் தற்போது கைதானவா்களையும் சோ்த்து இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தலைமறைவாக உள்ள பாகிஸ்தான் உளவாளிகள் இருவா் உள்பட இதுவரை 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் உளவு சதித் திட்டத்தை முழுமையாக கண்டறியும் வரை விசாரணை தொடரும் என்று என்ஐஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.