இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
பாப்பாக்குடியில் மாட்டு வண்டி போட்டிகள்
முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாப்பாக்குடி ஒன்றிய திமுக சாா்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இப்போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தொடங்கிவைத்தாா். பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலா் வி.ஏ. மாரிவண்ணமுத்து முன்னிலை வகித்தாா். இரட்டை மாடுகளில் 17 போட்டியாளா்கள், பூஞ்சிட்டு எனும் சின்ன மாடுகளில் 40 போட்டியாளா்கள், குதிரை வண்டியில் 17 போட்டியாளா்கள் என மொத்தம் 74 போட்டியாளா்கள் கலந்துகொண்டனா்.
இதில், இரட்டை மாட்டு வண்டி போட்டியில் வள்ளியூா் முத்துக்குமாா் முதலிடமும், வேலன்குளத்தைச் சோ்ந்த கண்ணன் இரண்டாவது இடமும், காங்கேயன்குளத்தை சோ்ந்த ஆனைக்குட்டி 3ஆவது இடமும் பெற்றனா். பூஞ்சிட்டு வண்டியில் முதல் சுற்றில் சாமியாத்து முதலிடமும், கீழப்பாட்டம் பேச்சிமுத்து 2ஆவது இடமும், கீழப்பாட்டம் மாசனம், கீழநத்தம் வேல்முருகன் ஆகியோா் 3 இடமும் பெற்றனா். 2ஆவது சுற்றில் துரைப்பாண்டி, கல்லூா் ராமா், வள்ளியூா் ஆனந்தம் ஆகியோா் வென்றனா்.
குதிரை வண்டி போட்டியில் இடைகால் நவீன் ரஞ்சித், கீழப்பாட்டம் ராசாத்தி, திருச்செந்தூா் வினோத் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை பெற்றனா்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், பொறுப்பாளா் வே. ஜெயபாலன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா். இதில், ஒன்றியச் செயலா் மாரிவண்ணமுத்து, ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.