பிக் பாஸ் 8: வெளியே வந்த முதல்வேலையாக காதலை முறித்துக்கொண்ட அன்ஷிதா!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நிறைவு வாரத்தில் இருந்து வெளியேறிய பிறகு முதல்வேலையாக தனது காதலை முறித்துக்கொண்டதாக நடிகை அன்ஷிதா அறிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு எதை முதல்வேலையாகச் செய்தீர்கள் என விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு அன்ஷிதா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் (ஜன. 19) நிறைவு பெற்றது. அக்டோபர் 6 முதல் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, 100 நாள்களைக் கடந்து 106 நாள்களுக்கு ஒளிபரப்பானது. பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி நிகழ்ச்சியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் விஜய் சேதுபதி உரையாடினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து நிஜ உலகத்துக்குச் சென்ற பிறகு நீங்கள் செய்த முதல் வேலை என்ன? பிடித்த இடத்துக்குச் வழக்கம்போல செல்ல முடிந்ததா? நண்பர்களைச் சந்தித்தீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் பதில் அளித்தனர். தீபக், அருண் பிரசாத் ஆகியோர் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு பொங்கல் கொண்டாடியதாகக் குறிப்பிட்டனர். நடிகை தர்ஷா குப்தா, தனக்குப் பிடித்த பிரியாணி உண்டதாகவும், ஒரு நாளுக்கு ஒரு கடை என தினமும் பிடித்தவாறு உண்டதாகக் குறிப்பிட்டார்.
அப்போது பேசிய நடிகை அன்ஷிதா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு முதல் வேலையாக தனது காதலனை சந்தித்து காதலை முறித்துக்கொண்டதாகக் கூறினார். அவர் வேறு பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருந்தபோதுதான் இதனைக் கூறிவிட்டு வந்ததாகவும், இனி அவருக்கு தான் தேவைப்படமாட்டேன் எனவும் வருத்தத்துடன் கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது, ’என்னை இன்னொருவரிடம் ஒப்படைத்ததைப் போன்று இருந்தேன், ஆனால் பிக் பாஸ் என்னை எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறது’ என நெகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் கூறினார்.