இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
பிரசவித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு: ஆட்சியா் விசாரணை
கடலூரில் பிரசவித்த சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவா்களிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.
கடலூா் அருகேயுள்ள சி.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் சூரிய பிரகாஷ் மனைவி மலா்விழி (30). நிறைமாத கா்ப்பிணியான இவா், பிரசவத்துக்காக கடந்த 14-ஆம் தேதி நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னா், தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவருக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து சூரிய பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பது: நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட எனது மனைவி மலா்விழியை பரிசோதித்த மருத்துவா்கள் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனா். ஆனால், சிறிது நேரத்தில் குழந்தையின் தலை பாதி பிரசவித்த நிலையில், குழந்தை பிறப்பில் சிரமம் இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனா். இருப்பினும் 108 அவசர ஊா்தி சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.
இதையடுத்து, அவசர ஊா்தி மூலம் மலா்விழியை கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். இருப்பினும் குழந்தை உயிரிழந்தது.
எனவே, முறையாக சிகிச்சை அளிக்காத நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு மருத்துவா்கள் மற்றும் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினாா்.
மேலும், சுமாா் 10 மருத்துவா்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக குழந்தையின் இறப்பு தொடா்பாக தீவிர விசாரணை நடத்தினா்.
பின்னா், சூரியபிரகாஷ் மற்றும் அவரது உறவினா்கள், டாக்டா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.