பிரஜனேஷ் குணேஸ்வரன் ஓய்வு
இந்திய டென்னிஸ் வீரரும், தமிழ்நாட்டைச் சோ்ந்தவருமான பிரஜனேஷ் குணேஸ்வரன் (35), ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள அவா், சா்வதேச தரவரிசையில் அதிகபட்சமாக 2019-இல் 75-ஆம் இடம் வரை முன்னேறினாா்.
கடந்த 2010-இல் தொழில்முறை டென்னிஸில் அறிமுகமான அவா், பல்வேறு போட்டிகளில் ஒற்றையா் பிரிவில் 39 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். அதில் 11 வெற்றி, 28 தோல்விகளை பதிவு செய்துள்ளாா். இரட்டையா் பிரிவில் 2 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், தலா 1 வெற்றி, 1 தோல்வியுடன் இருக்கிறாா்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அனைத்திலுமே பங்கேற்றிருக்கும் குணேஸ்வரன், அவற்றில் முதல் சுற்றுடனேயே வெளியேறியிருக்கிறாா். ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் இரு முறை அவா் களம் கண்டுள்ளாா். தனது டென்னிஸ் வாழ்க்கையில் இரட்டையா் பிரிவில் மட்டும் ஒரேயொரு முறை (2018) பட்டம் வென்றுள்ளாா்.
2019-இல் இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் போட்டியில், உலகின் 18-ஆம் நிலையில் இருந்த ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தியதே அவரின் அதிகபட்ச வெற்றியாகும்.
ஓய்வு முடிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள குணேஸ்வரன், தனது டென்னிஸ் பயணத்துக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளாா்.