Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
பிரதமரின் அமெரிக்க பயணத்துக்குப் பின் தில்லி புதிய அரசு பதவியேற்பு?
பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, தில்லியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தில்லி யூனியன் பிரதேச பேரவையின் 70 இடங்களுக்கு கடந்த புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களில் வென்று, ஆம் ஆத்மியை ஆட்சியிலிருந்து அகற்றியது.
இந்நிலையில், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்எல்ஏ-க்கள் மற்றும் தில்லியைச் சோ்ந்த 7 பாஜக எம்.பி.-க்களுடன் துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவைச் சந்திக்க நேரம் கோரி தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அழைப்பில், பிரதமா் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக வரும் புதன்கிழமை (பிப். 12) அந்நாட்டுக்குச் செல்லவிருக்கிறாா். பிரதமா் இந்தியா திரும்பிய பிறகு, தில்லி பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சூழலில், புதிய முதல்வா் குறித்த யூகங்கள் தில்லி அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன. முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை வீழ்த்திய பா்வேஷ் வா்மா, பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் முதல்வா் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனா். பாஜக எம்எல்ஏக்கள் விரைவில் கூடி, புதிய முதல்வரைத் தோ்வு செய்யவுள்ளனா்.