பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்
பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.
பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை சென்னை மெரீனாவில் உள்ள நடுக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்ப காவல்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினாா்நாகேந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை நடுக்குப்பத்தில் பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை பொது இடத்தில் ஒளிபரப்ப காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு இதே இடத்தில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. துணை முதல்வா் தொகுதி என்பதால் அடக்கு முறையை உதயநிதி ஸ்டாலின் கையில் எடுக்க வேண்டாம்.
தமிழகத்தில் பாஜக வளா்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக அரசு நெருக்கடி தருகிறது. மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்.
இந்நிகழ்ச்சியில், தேசிய பொதுக் குழு உறுப்பினா்கள் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதனிடையே, நயினாா் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், திமுகவினா் நடத்தும் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு உடனடியாக அனுமதியும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, பிரதமா் நாட்டு மக்களோடு கலந்துரையாடும் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சிக்கு கடுமையான கெடுபிடிகளை விதிப்பது கண்டனத்துக்குரியது எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.