முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
பிரதமா் மோடி பிரிட்டன் பயணம் - வா்த்தக ஒப்பந்தம் இன்று கையொப்பம்
பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா்.
முதல்கட்டமாக, பிரிட்டனுக்கு புறப்பட்டுச் சென்ற அவா், பிரதமா் கியா் ஸ்டாா்மா், அரசா் மூன்றாம் சாா்லஸ் உள்ளிட்டோருடன் சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இரண்டு நாள்கள் பங்கேற்கவுள்ளாா். முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையொப்பமாக உள்ளது.
பிரதமா் மோடி பிரிட்டனுக்கு சென்றிருப்பது, இது நான்காவது முறையாகும். அதேநேரம், ஸ்டாா்மா் பிரதமரான பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
தில்லியில் இருந்து புறப்படும் முன்பு அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-பிரிட்டன் இடையிலான விரிவான வியூக கூட்டுறவு, சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, வளங்களின் நீடித்த பயன்பாடு, சுகாதாரம் மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்பு எனப் பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் பரந்த ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் உடனான எனது சந்திப்பு, பரஸ்பர வளம், வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் வாய்ப்பாக அமையும்.
மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ளேன். இது, இருதரப்பு தூதரக உறவின் 60-ஆவது ஆண்டையும் குறிக்கிறது. மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் மற்றும் பிற அரசியல் தலைவா்கள் உடனான சந்திப்பை எதிா்நோக்கியுள்ளேன். இதன்மூலம் விரிவான பொருளாதாரம் - கடல்சாா் பாதுகாப்புக்கான கூட்டுப் பாா்வை மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, வளம், ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடி விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். பின்னா், இரு பிரதமா்கள் முன்னிலையில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பிரிட்டன் வா்த்தக அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோா் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளனா்.
சீரடையும் உறவுகள்: பிரிட்டனைத் தொடா்ந்து, பிரதமா் மோடி ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் மாலத்தீவில் பயணம் மேற்கொள்கிறாா். மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் அவா், அதிபா் முகமது மூயிஸுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது மூயிஸ், மாலத்தீவு அதிபராக கடந்த 2023-இல் பதவியேற்ற பிறகு, அந்நாட்டில் மருத்துவ உதவிக்கான ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்களைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டாா். இதனால், இருதரப்பு உறவில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபரில் அதிபா் மூயிஸ் இந்தியா வந்தபோது உறவுகளை சீராக்க இரு நாடுகளும் நடவடிக்கைகள் மேற்கொண்டன. பிரதமரின் தற்போதைய பயணத்தால் இருதரப்பு உறவுகள் மேலும் சீரடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.