பிரேத பரிசோதனையில் உயிருடன் எடுக்கப்பட்ட கோழி; அதிர்ந்த மருத்துவர்கள்... அமானுஷ்ய சடங்கால் சோகம்!
சத்திஸ்கர் மாநிலத்தில் கோழியை உயிருடன் விழுங்க முயற்சித்த நபர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் அவர் விழுங்க முயற்சி செய்த கோழியை மீட்டுள்ளனர்.
இந்த விசித்திர சம்பவம் நடந்த அம்பிகாபூர் மக்களும் மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமானுஷ்ய சடங்குகளுக்காக இதுபோன்ற விநோத செயல்களில் ஈடுபடுவதாக ஊர்மக்கள் தெவித்திருக்கின்றனர்.
இந்தியா டுடே வலைத்தளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, இந்த நபருக்கு உடற்கூறாய்வு செய்த மருத்துவர் சந்து பக், "நான் 15,000-க்கும் மேற்பட்ட உடற்கூறாய்வுகளை மேற்கொண்டுள்ளேன். என் வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயத்தை நான் பார்த்ததில்லை. இதைக் கண்டறியும்போது அதிர்ச்சியில் உறந்துவிட்டோம்." எனக் கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
வீட்டில் மயங்கி விழுந்த ஆனந்த் யாதவ் என்ற நபரை உடனடியாக அம்பிகாபூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அவரது குடும்பத்தினர் ஆனந்த் குளித்து முடித்த கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்ததாகக் கூறியுள்ளனர்.
ஆனந்தின் உடலை உடற்கூறாய்வு செய்யும்போது உயிருடன் கோழி இருந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர். அது 20 செ.மீ நீளமானதாக இருந்திருக்கிறது. உணவுக்குழல் மற்றும் மூச்சுக்குழல் இரண்டையும் அது அடைத்துக்கொண்டிருந்துள்ளது. அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.
அமானுஷ்ய சடங்கு செய்ய காரணம் என்ன?
ஆனந்த் யாதவ் மூடநம்பிக்கை காரணமாகவே இப்படி ஒரு செயலை செய்திருப்பார் எனக் கிராம மக்கள் கூறியிருக்கின்றனர். குழந்தையின்மையால் ஆனந்த் மனம்நொந்து இருந்துள்ளார், அதற்காக உள்ளூரில் உள்ள தாந்திரகவாதியை சந்தித்துள்ளார்.
அவர் தந்தையாவதற்கான அமானுஷ்ய சடங்கின் பகுதியாகவே அவர் கோழியை விழுங்கியதாகவும் சில உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளனர். ஆனந்த் யாதவ் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.