Iran Hijab: ``சட்டத்தில் திருத்தம் வேண்டும், அதனால்.." - ஹிஜாப் விவகாரத்தில் பின...
நெல்லை: ஒரே சீரியல் எண்; கூட்ட நேரத்தில் கைவரிசை… கள்ள நோட்டு தயாரித்தவர் சிக்கியது எப்படி?
கள்ள நோட்டு..!
நெல்லை மாவட்டம், பாபநாசம் மருதம் நகரைச் சேர்ந்தவர் முகம்மது சமீர். இவர் அதே பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கூட்டம் அதிகமாக இருந்த போது ஒருவர் வந்து புதிய 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து 20 ரூபாய்க்கு காய்கறி வாங்கியுள்ளார். மீதமுள்ள 80 ரூபாயை வாங்குவதற்காக நின்றார். அந்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய ரூபாய் நோட்டை மாற்றியது சமீருக்கு நினைவு வந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர், ரூபாய் நோட்டின் காகிதம் வித்தியாசமாக உள்ளதே என கேட்க, அதற்கு அந்த நபர் கூட்டத்திலிருந்து ஓட முயன்றார். கடையில் காய்கறி வாங்க வந்தவர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து விக்கிரமசிங்க புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறப்பட்டுள்ளது. அந்த நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர், கடையம் ஆழ்வான் துலுக்கப்பட்டியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பது தெரிய வந்தது. அவர் தன் வீட்டில் வைத்து கலர் ஜெராக்ஸ் மிஷினை பயன்படுத்தி 100 ரூபாய் நோட்டை நகல் எடுத்து கள்ளநோட்டுக்களை பல்வேறு கடைகளில் மாற்றியது தெரிய வந்தது. அவரிடமிருந்து 2 கலர் ஜெராக்ஸ் மிஷின்கள், 100 ரூபாய் நோட்டுகள் 25, 4 இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், ”ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளுக்கும் தனித்தனி சீரியல் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஆசைத்தம்பி கடைகளில் கொடுத்த 100 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 ரூபாய் கள்ள நோட்டுகள் அனைத்திலும் ஒரே சீரியல் எண்கள் உள்ளன. அவரிடம் விசாரணை நடத்தியதில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்ததை ஒப்புக் கொண்டார். விக்கிரமசிங்க புரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்காக எப்போதும் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் கூட்டம் அதிகமாகவும் பரபரப்பாகவும் காணப்படும்.
இது போன்ற கூட்ட நேரத்தில் நோட்டை மாற்றினால் கடைக்காரர்கள் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து ஆசைத்தம்பி, பலமுறை கள்ளநோட்டுக்களை மாற்றி கைவரிசையைக் காட்டியுள்ளார். பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளை கவனிக்கும் கடைக்கார்கள், வியாபாரிகள் 100 ரூபாய் நோட்டை வாங்கிவிட்டு மீதம் சில்லறையைக் கொடுத்து விடுவதால் ஆசைத்தம்பி இதுவரை சிக்காமல் இருந்துள்ளார். ஆனால், சமீரின் கடையில் ஏற்கெனவே ஒருமுறை கள்ள நோட்டை மாற்றியதால் அவர் முகத்தை சரியாக நியாபகம் வைத்து மடக்கி பிடித்துள்ளார்” என்றனர்.