மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!
கோவை பாஷா இறுதி ஊர்லவம்: அதிவிரைவுப் படை குவிப்பு!
கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்தையொட்டி, மத்திய அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறைக்குச் சென்ற பாஷா நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிக்க : டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய, மாநில அரசு கடிதங்களில் என்னதான் இருக்கிறது?
அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் கபர்கஸ்தானில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பாஷா இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு கருதி கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் மத்திய அதிவிரைவு படையினர் என 3,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படை போலீஸார் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். தொடர்ந்து இறுதி ஊர்வலம் நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.