I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Men...
பிறப்புரிமைக் குடியுரிமை ரத்து முடிவுக்கு எதிராக 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு!
அமெரிக்காவில் வெளிநாட்டவருக்குப் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை எதிர்த்து 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்க மாகாணங்கள் தொடர்ந்திருக்கும் வழக்கில் வெளியாகும் நீதிமன்ற உத்தரவை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முதல் வேலை நாளிலேயே, பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக, அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கடைப்பிடிப்பது என்ற உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இதனால், அமெரிக்காவில் வாழும் எண்ணற்ற வெளிநாட்டவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆனால் அதேவேளையில், அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவைத் தடுக்கக் கோரி அமெரிக்காவின் 22 மாகாணங்கள், ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருப்பதாக அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி 21ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக குடியுரிமை வழங்குவதை நிறுத்துவது உள்பட தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ஆனால், டிரம்ப் இவ்வாறு கையெழுத்திட்டாலும், அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தம் பிறப்புரிமை குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பதை சட்ட நிபுணர்கள் ஒருமித்தக் குரலில் சொல்லியிருப்பதோடு, டிரம்பின் உத்தரவு நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
அதாவது, சட்டவிரோதமாக நாட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு அல்லது தற்காலிக விசாவில் சட்டப்பூர்வமாக அமெரிக்கா வந்திருக்கும் தாய்மார்களுக்கு, தந்தை அமெரிக்க குடிமகனாகவோ அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவராகவோ இல்லாவிட்டால், குழந்தைகளுக்கான பிறப்புரிமை குடியுரிமையை அங்கீகரிக்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஃபெடரல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை அட்டை என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் பச்சை அட்டை, வெளிநாட்டவர், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணிபுரிய அனுமதிக்கிறது.
குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவர் அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வமான நிரந்தரக் குடியுரிமை பெற்றவராகவோ இல்லாவிட்டால், 30 நாட்களுக்குள் அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமையை நிர்வாக ஆணை வழங்காது. ஒருவேளை மாகாணங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு தடை விதிக்காத வரை இதுதான் தொடரும்.
பிறப்புரிமை குடியுரிமை ரத்து செய்யப்படும் என்பது டிரம்பின் தேர்தல் பிரசார வாக்குறுதியாகும்.
ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்களின் அட்டர்னி ஜெனரல்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கான உரிமைகளுக்காக ஆஜராகும் வழக்குரைஞர்கள் அனைவரும், பிறப்புரிமை குடியுரிமை ஒரு நிரந்தர சட்டம் என்றும் அமெரிக்க அதிபர், அரசியலமைப்பிற்கு மேலானவர் அல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.
அமெரிக்க அதிபர், தனது பேனாவால் 14-வது சட்ட திருத்தத்தை எழுதிவிட முடியாது என்று நியூ ஜெர்சி அட்டர்னி ஜெனரல் மாட் பிளாட்கின் கூறியதாக அசோசியேட் பிரஸ் தெரிவித்துள்ளது.