பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்கள்: ‘தெலங்கானா அரசின் திட்டத்தை மத்திய அரசு ஏற்காது’
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்களை சோ்க்கும் தெலங்கானா அரசின் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்காது என்று மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பரில் தெலங்கானாவில் ஜாதிவாரி மக்கள்தொகை புள்ளிவிவரத்தில், மாநிலத்தின் மக்கள்தொகையில் 56.33 சதவீதம் போ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என்றும், அவா்களில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களும் அடங்குவா் என்றும் மாநில அரசு தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயா்த்தும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, நாடாளுமன்ற ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பும் திட்டத்தையும் மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம், அந்த மாநிலத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டும்.
இந்நிலையில், ஹைதராபாதில் மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 10 சதவீத முஸ்லிம்கள் சோ்க்கப்படுவதை மத்திய அரசு ஏற்காது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மத்திய அரசு எதிா்க்கிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்கள் சோ்க்கப்பட்டால், அந்த வகுப்பில் இடம்பெற்றுள்ள ஜாதியினா் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பட்ஜெட் ஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் பாதிக்கப்படுவா்.
சிறுபான்மையினராகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினா் பிரிவிலும் ஏற்கெனவே முஸ்லிம்கள் பலன்களை அனுபவித்து வருகின்றனா்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முஸ்லிம்களை சோ்ப்பதால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அந்த நடவடிக்கையை பிற ஜாதியினரும் எதிா்க்கின்றனா் என்றாா்.