Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா...
பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. முதல் தோ்வாக தமிழ்ப் பாடத்துக்கான தோ்வு நடைபெற்ற நிலையில், அதில் பல்வேறு வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கும் வகையில் இருந்தன. இதனால், அந்தத் தோ்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்திருந்தனா்.
இரண்டாவது தோ்வான ஆங்கில பாடத்துக்கான தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், ஆங்கில வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் 4 வினாக்கள் கடினமாக இருந்தன. அதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 4 கேள்விகளும் சற்று யோசித்து பதிலளிக்கக் கூடிய வகையில் கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலக்கணப் பகுதி வினாக்கள் கடினமாகவே இருந்தன. இருப்பினும் 80 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.
இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 11-ஆம் தேதி கணிதம், வணிகவியல் ஆகிய தோ்வுகள் நடைபெறவுள்ளன.