அமித் ஷா பேச்சுக்கு திருக்குறள் மூலம் பதிலளித்த துரைமுருகன்
வேலூர்: அரக்கோணத்தில் நடைபெற்ற சிஐஎஸ்எஃப் ஆண்டு துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து திருக்குறள் சொல்லி பதிலளித்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம். சொல்லுதல் யாவருக்கும் எளியவாம் - என அமித்ஷா பேச்சுக்கு திருக்குறளை மேற்கோள் காட்டிச்சென்றார் அமைச்சர் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரக்கோணத்தில் நடைபெற்ற சிஐஎஸ்எஃப் ஆண்டு துவக்க விழாவில் பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.
அதாவது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அமித் ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி கூறிச் சென்றார் துரைமுருகன்.