"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக 7 மாநிலங்களைச் சோ்ந்த 29 கட்சிகளுக்கு முதல்வா் கடிதம் எழுதினாா்.
தொடா்ச்சியாக, திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தமிழக மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்க முயற்சிக்கும் பிரதமா் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பு மேற்கொள்ள முயல்வதை மக்களுக்கு புரிய வைக்கும் வகையிலும் கண்டன கூட்டங்கள் நடைபெறவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் மாா்ச் 12-இல் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தவுள்ளாா். வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலா் துரைமுருகன் பங்கேற்கவுள்ளாா்.