IND vs NZ: ஸ்பின்னர்கள் இருக்க பயமேன்; சொல்லியடித்த ரோஹித்; நியூசிலாந்து தடுமாறி...
போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு
போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் கடிதம் எழுதியுள்ளாா்.
போக்ஸோ வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை போக்ஸோ வழக்கிலிருந்து விடுவித்தும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச தண்டனை வழங்கியிருந்தது. இந்தத் தண்டனையை எதிா்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா்.
அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்ததில் பல்வேறு குறைகள் உள்ளன. எனவே, அரசு இந்த விவகாரத்தில் ஏன் உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை என கேள்வியெழுப்பி, இதுபோன்ற விவகாரங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இது தொடா்பாக தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா எழுதிய கடிதம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களுக்காக போக்ஸோ சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளிலும், பிற கொடுங்குற்ற வழக்குகளிலும் விசாரணை நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்தால், அதை எதிா்த்து விசாரணை அதிகாரியும், அரசு குற்றவியல் சிறப்பு வழக்குரைஞா்களும் உடனடியாக அதில் சிறப்புக் கவனம் செலுத்தி தீா்ப்பு விவரத்தை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.
அந்த வழக்கில், விடுதலையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று காலதாமதமின்றி மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடா்பாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை ஆய்வாளா்கள், புலன் விசாரணை அதிகாரிகள், அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா்களுக்கு டிஜிபி தகுந்த சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.