புகையிலைப் பொருள்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்
பாபநாசம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 4 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
பாபநாசம் பேரூராட்சி கடைவீதி பகுதிகளில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என உணவு பாதுகாப்பு அலுவலா் மணவாளன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா், பாபநாசம் காவல் ஆய்வாளா் ஜெகஜீவன், சுகாதார ஆய்வாளா் பரமசிவம் உள்ளிட்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பாபநாசம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தக் கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அந்தக் கடை 15 நாள்களுக்கு தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதேபோல், ராஜகிரி, பண்டாரவாடை, இடையிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அப்பகுதியிலும் 3 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.