தஞ்சாவூா் ஆட்சியரக வாயிலில் இளைஞா் தற்கொலை முயற்சி
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வாயிலில் திங்கள்கிழமை உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காவல் துறையினா் மீட்டனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தையொட்டி, தற்கொலை முயற்சி சம்பவத்தைத் தடுப்பதற்காக வாயிலில் காவல் துறையினா் வழக்கம்போல முழுவீச்சில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளை நாயக்கன் பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் முருகேசன் (36) ஆட்சியரக வாயிலில் திடீரென தன் உடலில் பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றிக் கொண்டாா்.
இதைப் பாா்த்த காவல் துறையினா் உடனடியாக முருகேசனை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இடப் பிரச்னையில் தன் வீட்டை சிலா் ஞாயிற்றுக்கிழமை இடித்து சேதப்படுத்தியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து, முருகேசனை காவல் துறையினா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.