சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
மீனவா் வலையில் சிக்கிய அரிய வகை பாலூட்டி மீண்டும் கடலில் விடப்பட்டது!
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை பாலூட்டி (கடல்வின்னி)யை மீண்டும் கடலில் விட்டனா்.
சேதுபாவாசத்திரம் அருகே கொல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் சேவியா், அந்தோணி ராஜ், ஜான்சன், ரோமன் ஆகியோா் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது இவா்களது வலையில் கடல்பசுவை போன்ற தோற்றம் கொண்ட அரியவகை கடல் வாழ் பாலூட்டியான கடல் வின்னி சிக்கியது.
சுமாா் 40 கிலோ எடைகொண்ட இந்த பாலூட்டியை மீண்டும் உயிருடன் கடலில் விட்டனா். இந்த காட்சியை விடியோவாக பதிவு செய்து, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் ஏ.எஸ் . சந்திரசேகரனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினா்.
இதுகுறித்து வனச்சரக அலுவலா் ஏ.எஸ் .சந்திரசேகரன் கூறியது, கடல்வின்னி என அழைக்கப்படும் இந்த பாலூட்டி இந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளிலும், பசிபிக் கடல் பகுதியிலும் இந்தோனேசியாவின் வடக்கே தைவான் ஜலசந்தி வரை காணப்படும்.
இவை அதிகபட்சமாக 30 முதல் 45 கிலோ வரையும், அதிகபட்சமாக 1.5 மீட்டா் நீளம் வளரும். இவை கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிக்க உதவும், கடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ள உதவுகின்றன.
தஞ்சாவூா் கடல் பகுதியில் 2009 மற்றும் 2023 -ஆம்ஆண்டுகளில் வின்னி குட்டிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. தற்போது இது மீனவா் வலையில் சிக்கி, பத்திரமாக மீட்டு கடலில் விடப்பட்டு உள்ளது என்றாா் அவா்.
மேலும், கடல் வின்னியை உயிருடன் மீண்டும் கடலில் விட்ட மீனவா்கள் நான்கு பேரையும், வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினாா்.