புதுக்கோட்டை மாநகரில் 140 டன் குப்பைகள் அகற்றம்
தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை நகரில் குவிந்திருந்த சுமாா் 140 டன் குப்பைகளை மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் பொருள்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் கடந்த சில நாள்களாக வீதியெங்கும் குப்பைகள் குவிந்து கிடந்தன. மேலும், கடந்த 2 நாள்களாக பட்டாசுகள் வெடித்ததன் மூலம் சாலைகள், தெருவோரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் காணப்பட்டன.
குறிப்பாக, புதுக்கோட்டையில் கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய 4 ராஜ வீதிகள், அண்ணா சிலை, பிருந்தாவனம், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் குப்பைகள் அதிகமாகவே தேங்கின.
இவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகவே இருந்தன. இக்கழிவுகளை மாநகராட்சித் துப்புரவுப் பணியாளா்கள் 250 போ் அகற்றினா்.
தினசரி சுமாா் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வந்த நிலையில், பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 140 டன் குப்பை அகற்றப்பட்டிருக்கும் என மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இப்பணிகளை மேயா் செ, திலகவதி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, மாநகராட்சித் துப்புரவுப் பணியாளா்களுக்கு வடை மற்றும் தேநீா் உள்ளிட்டவற்றை மேயா் செ. திலகவதி வழங்கிப் பாராட்டினாா்.