ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!
புதுச்சேரி: `பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ - பேரவையில் போர்க்கொடி தூக்கிய திமுக
புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கியது. 12-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காரைக்காலில் ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் காரைக்காலில் சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்த தாரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக, புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகு உள்ளிட்டவர்களை சி.பி.ஐ அதிரடியாக கைது செய்திருக்கிறது.
இந்த விவகாரம் புதுச்சேரியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை துவக்கினார் சபாநாயகர் செல்வம்.

அப்போது அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் சிவா, ``லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு இணையாக பணியாற்றிய பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளை சி.பி.ஐ கைது செய்திருக்கிறது. இதனால் புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இதற்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் லட்சுமிநாராயணன் பதவி விலக வேண்டும்.
இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர் செல்வம் அதற்கு அனுமதிக்கவில்லை.
தர்ணா
அதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடன் சபாநாயகர் இருக்கைக்கு எதிரில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் எதிர்க்கட்சித் தலைவர் சிவா. அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்களை வெளியேற்ற சபைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர். அதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்கள் பேரவைக் காவலர்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் சிவா, ``புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் ஆகியோர் ரூ.7.5 கோடி ஒப்பந்தத்திற்கு லஞ்சம் வாங்கியபோது, காரைக்காலில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது புதுச்சேரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காரைக்காலில் ஒரு ஒப்பந்த பணிக்கு இவ்வளவு முறைகேடு நடந்திருக்கிறது. அதனால் தலைமைப் பொறியாளரின் பணிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு என்ன செய்யப்போகிறது என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம். ஆனால் பேரவைத் தலைவர் ஆளும் அரசுக்கு ஆதரவானவர் என்பதால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அனுமதி அளிக்க வலியுறுத்தி தொடர்ந்து தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டோம். அதற்கும் செவிமடுக்காத பேரவைத் தலைவர் எங்களை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறைகளில் அனைத்து பணிகளும் முடங்கிப்போய் உள்ளது. பேரவையில் பொதுப்பணித்துறை தொடர்பாக எழும் கேள்விக்கு யார் பதிலளிப்பார்கள் ? அதனால் பொதுப்பணித்துறைக்கு அமைச்சராக இருக்கும் லட்சுமிநாராயணன் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினோம். ஆனால் எங்கள் கோரிக்கையை மதிக்காமல் சபையை தொடர்ந்து நடத்துகிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிகாரிகள் மக்கள் பணத்தில் உண்டு கொழுத்து சாப்பிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் சட்டம் இயற்றி தண்டிக்க அரசு தவறிவிட்டது.
இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இதுதொடர்பாக துறை அமைச்சர் ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் நடத்துவோம். பொதுப்பணித்துறையில் நடைபெற்ற பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவோம். குறிப்பாக தரமாக இருந்த புதிய பஸ் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, மோசமான நிலையில் பலகோடி வரை செலவு செய்துள்ளனர். அப்படி இருந்தும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை உள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. தொடர்ந்து சி.பி.ஐ–யின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். அதனடிப்படையில் எங்களின் அடுத்த நடவடிக்கை இருக்கும்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
