புதுச்சேரி: வெற்றிலை லட்டு… சோற்றுக் கற்றாழை பாயசம்… களைகட்டும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் - 2
சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன், `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் - 2’ ஆரம்பமாகி விட்டது. வாசகர்களின் கைப்பக்குவத்துக்குப் பாராட்டும், பரிசும் தரும் இந்த மாபெரும் சமையல் போட்டி, தமிழகம் முழுக்க 13 ஊர்களில் நடக்கவிருக்கிறது. இதன் மெகா இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும்.
முதல் போட்டி மதுரையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் ஆறாவது போட்டி விழுப்புரத்திலும் நடைபெற்ற நிலையில், 7-வது போட்டி புதுச்சேரி ஆறுமுகா திருமண நிலையத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/bjr77q39/50d8b0df-85be-4060-9b19-62b1ec34325f.jpg)
குறிப்பாக புதுச்சேரி நகரப் பகுதி மட்டுமல்லாமல் காலாப்பட்டு, வில்லியனூர், பாகூர், கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
முதல் சுற்று தேர்வுக்காக சிமிலி (கேழ்வரகு மற்றும் தினை மாவில் செய்தது), சாக்லேட் பணியாரம், சாக்லேட் பால், மஸ்க் மெலன், மஸ்தானி, கொழுக்கட்டை, பாயசம், தேங்காய் துவையல், அரிசி நெய் இட்லி, இறால் வடை, ராகி ஸ்வீட், ஹைதராபாத் மட்டன் பிரியாணி, தினை அதிரசம், அத்திக்காய் துவையல், வெற்றிலை லட்டு, பச்சைப்பயறு பாயாசம், சீராளங்கறி, கார கொழுக்கட்டை, மீல் மேக்கர் ஃப்ரை, கேழ்வரகு இனிப்புக் கூழ், வள்ளிக் கிழங்கு கட்லெட், கோலா உருண்டை, கம்பு மாவு பணியாரம், கருப்பு கவுனி சர்க்கரைப் பொங்கல், தஞ்சாவூர் ஒரப்பு அடை, கோதுமை கிச்சடி, இறால் புட்டு, முள்ளங்கி பஜ்ஜி, சோள கொழுக்கட்டை, திருவாச்சி இலை ஊறுகாய், வாழைப்பூ அடை, கேழ்வரகு களி, வரகு கேசரி, தூதுவளை ரசம், ராகி பிரௌனி, வல்லாரை நூடுல்ஸ், ராகி குதிரைவாலி சூப், மாதுளை மொஜிட்டோ, ஸ்ட்ராபெர்ரி மில்லட் அவல் பாயாசம், மில்லட் ஃபலாஃபில், அவல் சாலட் என வித விதமாக சமைத்துக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/ez3n96kb/bf4527e5-5cab-4e35-871a-b6646fc65aa5.jpg)
மேலும் வாழைக்காய் கோலா உருண்டை, நெத்திலி அவியல், நச்சுக்கொட்டை கீரை உப்புமா, கொண்டைக்கடலை வடை, சுண்டைக்காய் சாதம், கடலைப் பருப்பு புட்டு, பாலக்கீரை சிக்கன் கிரேவி, முள்ளங்கி சப்பாத்தி, சுரைக்காய் பஜ்ஜி, பம்ப்கின் இட்லி, சார்கோல் இடியாப்பம், பருத்தி மூட்டை இளநீர், இடியாப்பம் சோயா குடல் குழம்பு, மால்புவா ரப்டி, இறால் சேமியா, சங்குப் பூ செம்பருத்திப் பூ ஜெல்லி, சோற்றுக் கற்றாழை பாயசம் என அந்த அனைத்து உணவுகளையும் சுவைத்த செஃப் தீனா, அதன் செய்முறை குறித்து போட்டியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
இதற்கிடையில் காத்திருந்த போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு மேடையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் செஃப் தீனா உரையாடும் போது, ``வீட்ல குறிப்பிட்ட சாப்பாட்டைத்தான் திரும்ப திரும்ப சாப்பிட முடியும். வழக்கமான உணவைத் தவிர பெரும்பாலும் எதுவும் இருக்காது. ஆனால் அவள் விகடனின் இந்த சமையல் நிகழ்ச்சிக்கு வந்தால் பல ஊர்களில் இருந்து வரும் வித்தியாசமான உணவு வகைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்று ஆதாம் என்ற சிறுவன் சொல்ல அரங்கம் அதிர்ந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/mb7yp5b3/WhatsApp_Image_2025_02_08_at_4_05_40_PM.jpeg)
புதுச்சேரி தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஆதாம், சிக்கன் சீஸி பிரெஞ்சு ஃபிரைஸ் செய்து அசத்தியிருந்தார். அதேபோல புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கீழ் செயல்படும் `பாண்டிச்சேரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங் டெக்னாலஜி’ மாணவர்களான சதாசிவம், சூர்யபிரகாஷ், கஜலட்சுமி, சதீஷ், ரஞ்சித், ஹரிபிரசாத் போன்றவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் உளுந்தங்களி, இடிச்சல் நாட்டுக் கோழி ரசம், மட்டன் கோலா உருண்டை, பள்ளிப்பாளையம் சிக்கன், மட்டம் எலும்புத் தண்ணி குழம்பு, நெய் நோறு போன்றவற்றை அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர்.