புதுச்சேரியில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணி தொடக்கம்! -முதல்வா், நீதிபதி பங்கேற்பு
புதுச்சேரி அருகேயுள்ள இலாசுப்பேட்டை பகுதியில் ரூ.5 கோடியில் 7 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜையில் முதல்வா், நீதிபதி மற்றும் அமைச்சா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.
புதுச்சேரி காலாப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள இலாசுப்பேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில், புதிதாக ரூ.5 கோடியில் 7 நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா். உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.
தொடா்ந்து, முதல்வா், நீதிபதி, அமைச்சா் ஆகியோா் நீதிபதிகள் குடியிருப்புக்கான பணியைத் தொடங்கிவைக்கும் வகையில் செங்கல்லை எடுத்துக்கொடுத்தனா். பூஜையில் புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், காலாப்பட்டு எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம், தலைமைப் பொறியாளா் தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளா் வீரச்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.