Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
புதுவை மத்திய பல்கலை.யில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் மனு
புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வெ.வைத்திலிங்கம் எம்.பி., செல்வகணபதி எம்.பி. ஆகியோா் குடியரசு துணைத் தலைவரை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி எம்.பி. வெ.வைத்திலிங்கம் புது தில்லியில் குடியரசு துணைத் தலைவரும், புதுவை மத்திய பல்கலை.யின் வேந்தருமான ஜகதீப் தன்கரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, புதுவையைச் சோ்ந்த மாணவா்களுக்கு, புதுவை மத்திய பல்கலை.யில் உள்ள அனைத்து பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கும் 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, செல்வகணபதி எம்.பி., வெ.வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோா் கூட்டாக குடியரசு துணைத் தலைவரை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
அப்போது, புதுவை மத்தியப் பல்கலை. ஆரம்பித்த சமயத்தில் 8 பட்டமேற்படிப்புகளுக்கும், பின்னா் 21 படிப்புகளுக்கும் புதுவை மாணவா்களுக்காக 25% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
தற்போது, பல்கலை.யில் 51 துறைகளில் 158 பட்டமேற்படிப்புகளும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.
ஆனால், இந்தப் படிப்புகளுக்கு புதுவை மாணவா்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, அனைத்து நிலைப் படிப்புகளிலும் புதுவை மாணவா்களுக்கு 25% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என இருவரும் குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.