புனே: "தாலி, குங்குமம் தேவையில்லையெனில் கணவன் மட்டும் எதற்கு?" - நீதிபதி கேள்வி; வழக்கறிஞர் ஆதங்கம்
குடும்பப் பிரச்னையில் கணவனைப் பிரிந்திருக்கும் பெண் தனது கணவன் மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்திருந்தார். அப்பெண்ணின் வழக்கு புனே செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பெண்ணிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்த்து வைக்கும் நோக்கில் பெண்ணிடம் நீதிபதி பேசினார்.
நீதிபதியிடம் அப்பெண் பேச வரும்போது அப்பெண் நெற்றியில் குங்குமம் அணிந்திருக்கவில்லை. அதோடு கழுத்தில் திருமணமான பெண்ணிற்கு அடையாளமாகத் தாலியும் அணிந்திருக்கவில்லை.
இது குறித்து அப்பெண்ணிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, "தாலி, குங்குமம் இல்லை. திருமணமான பெண்ணைப் போன்று நடந்து கொள்ளவில்லையெனில் கணவன் மீது மட்டும் ஏன் ஆர்வம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். நீதிபதி இது போன்று பெண்ணிடம் பேசியதை வழக்கறிஞர் அன்குர் ஜஹாங்கிர்கர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீதிபதியின் செயல் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "நீதிபதிகளின் தவறான கருத்துக்கள் குறித்து புகார் செய்ய எந்த வழியும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. மாவட்ட நீதிமன்றங்களில் நடக்கும் இன்னும் பல விஷயங்கள், பகுத்தறிவு சிந்தனை கொண்ட எந்தவொரு படித்த நபரின் மனசாட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். துரதிர்ஷ்டவசமாக, நமது சமூகம் சில மூர்க்கத்தனமான விஷயங்களுக்கு ஒரு அடிப்படை சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதே போன்று மற்றொரு நிகழ்ச்சியையும் அன்குர் அதில் பகிர்ந்திருந்தார். அதில், "செசன்ஸ் கோர்ட் நீதிபதி எனது வாடிக்கையாளரிடம் விட்டுக்கொடுத்துப் போகும்படி கூறுகிறார். நீதிபதி எனது கட்சிக்காரரிடம், 'ஒரு பெண் நன்றாகச் சம்பாதிக்கிறார் என்றால், அவர் எப்போதும் தன்னை விட அதிகமாகச் சம்பாதிக்கும் ஒரு கணவனைத் தேடுவார். குறைவாகச் சம்பாதிக்கும் ஒருவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இருப்பினும், நன்றாகச் சம்பாதிக்கும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவன் தன் வீட்டில் பாத்திரங்களைக் கழுவும் ஒரு வேலைக்காரியைக் கூட மணக்கலாம்.
ஆண்கள் எவ்வளவு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். நீங்களும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடக்கவேண்டும். இறுக்கமாக இருக்காதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகளின் இந்த செயல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கின்றன.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
