புழல் குப்பைக் கிடங்கில் தீ விபத்து
புழலில் குப்பைக் கழிவுகள் தரம் பிரிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை மாதவரம் அடுத்த புழலில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள், அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குப்பைக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில், புதன்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தகவல் அறிந்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைக்கும் வாகனங்கள் மூலம் வீரா்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். குப்பைக் கழிவுகளில் காய்ந்த ரப்பா், நெகிழி போன்றவை தீப்பிடித்து எரிந்ததால், அந்தப் பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. ரசாயனக் கலவைகளால் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.
தீ விபத்து குறித்து புழல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
