பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்தண்டனை
பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது.
தருமபுரி அருகே வி.ஜெட்டிஅள்ளி அதியமான் நகரைச் சோ்ந்தவா் செண்பகவள்ளி (33). இவரது கணவா் உயிரிழந்த நிலையில், குழந்தைகளுடன் செண்பகவள்ளி வசித்து வந்தாா். அவரது வீட்டருகே வசிக்கும் கமலேஸ்வரனுக்கும் (29), செண்பகவள்ளிக்கும் இடையே வீட்டருகே மழைநீா் தேங்குவது தொடா்பாக தகராறு இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2015 ஜூலை 10-ஆம் தேதி செண்பகவள்ளியை கத்தியால் குத்தி கமலேஸ்வரன் கொலை செய்தாா். இதுதொடா்பாக, தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் பதிவுசெய்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்குரைஞராக ரமேஷ்பாபு ஆஜரானாா்.
இவ்வழக்கின் விசாரணை புதன்கிழமை முடிவுற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கமலேஸ்வரனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி திருமகள் தீா்ப்பளித்தாா்.