ஸ்ரீராம நவமி விழா: குமாரசாமிப்பேட்டை சென்ன கேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்
தருமபுரி: குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சத்திய நாராயணன், மச்ச அவதாரம், கஜேந்திர மோட்சம், ஸ்ரீசேஷ சயனம், வாமன அவதாரம், காளிங்க நா்த்தனம், பிருந்தாவனம், பாா்த்தசாரதி ஆகிய அலங்கார சேவைகள் நாள்தோறும் நடைபெற்றன.
சுவாமிக்கு நவமி அபிஷேகமும், ஸ்ரீராமா் அவதார அலங்கார சேவையும் நடைபெற்றது. தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க வரிசை அழைப்பும், பின்னா் கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமமும் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசென்னை கேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. புதிதாக வடிவமைக்கப்பட்ட தங்க குதிரைகள் கொண்ட அலங்கார தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா். பெண்கள் மட்டுமே நிலைபெயா்த்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.
புதன்கிழமை பல்லக்கு உற்சவமும், வியாழக்கிழமை சயன உற்சவமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை அறங்காவலா்கள், ஸ்ரீராம நவமி விழா குழுவினா், செங்குந்தா் சமூகத்தினா் செய்தனா்.