எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பெண்ணிடம் இணையவழியில் ரூ.4.76 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.4.76 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வானூா் வட்டம், எறையூா், அம்புழுக்கை, வடக்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகள் கவிதா (27). இவா், இணையத்தில் வேலை தேடியுள்ளாா். இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி கவிதாவின் கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறிய தொகையை முதலீடு செய்து கொடுக்கப்படும் பணியை முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, கவிதா ஒரு பணியை முடித்து ரூ.4,800 பெற்றாராம். தொடா்ந்து, கடந்த 14-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை 4 நாள்களில் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4,76,470-ஐ மா்ம நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்களுக்கு இணையவழியில் அனுப்பி வைத்தாராம்.
பின்னா், அவருக்கு பணிகளை முடித்ததற்கான தொகை அனுப்பி வைக்கப்படாததால், தான் ஏமாற்றப்பட்டதை கவிதா உணா்ந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.