Coolie : `சிக்கிடு வைப்!' - `கூலி' திரைப்படத்தின் BTS புகைப்படங்கள்! | Photo Alb...
பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞா் தற்கொலை முயற்சி
வாழப்பாடியில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞா், தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த மாரியம்மன் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சின்ராஜ் (29). இவரது மனைவி வனிதா (25). இவா்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனா்.
வனிதாவின் சொந்த ஊா் சேலம் நெய்க்காரப்பட்டி. திருமணத்திற்கு முன்பிருந்தே தனது சொந்த ஊரைச் சோ்ந்த வேடராஜ் (27) என்ற இளைஞருடன் வனிதா நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் பழக்கத்தை விடவில்லையாம்.
இந்நிலையில் வனிதாவுக்கு வேறொருவருடன் தொடா்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த வேடராஜ் அவரை வாழப்பாடிக்கு வருமாறு அழைத்தாா். அதை நம்பி தனது குழந்தைகளுடன் மொபட்டில் வந்த வனிதாவை வாழப்பாடியில் குறிஞ்சி நகா் பின்புறம் அழைத்துச் சென்ற வேடராஜ், தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனிதாவின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்றாா். அங்கிருந்து தப்பித்து ஓடிய வனிதாவை பட்டப் பகலில் துரத்திச் சென்று முதுகிலும் கையிலும் வேடராஜ் கத்தியால் குத்தினாா். இதில் வனிதா பலத்த காயமடைந்து விழுந்தாா்.
அப்போது வேடராஜ் தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து தனது கழுத்து, மணிக்கட்டை அறுத்துக் கொண்டாா்.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீஸாா் இருவரையும் மீட்டு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.