பென்னாகரம் பேருந்து நிலைய கடைக்கான ஏலம் ஒத்திவைப்பு
பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம், நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பென்னாகரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிறுத்துமிடம், கட்டணக் கழிப்பிடம், பூங்கா உள்ளிட்ட வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டு அதில் உள்ள 61 கடைகள், கட்டணக் கழிப்பிடம், இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றுக்கான ஏலம் மாா்ச் 20 மற்றும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது.
கடை ஏலம் எடுப்பதற்காக ஏராளமானோா் வங்கிகளில் வைப்புத் தொகைக்கான காசோலை பெற்றிருந்தனா். இந்த நிலையில், திட்டமிட்டபடி வியாழக்கிழமை ஏலம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நிா்வாக காரணங்களுக்காக ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு ஆணை ஒட்டப்பட்டுள்ளது.