74 ஆண்டுகள், 352 போட்டிகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை..! ரஞ்சி இறுதிப் போட்டிய...
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம்: உச்சநீதிமன்றம்
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கா்நாடக மாநிலம் பெங்களூரில் பிட் அண்ட் ஹாமா்-நுண்கலை ஏல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில் ஏலவிடப்பட இருந்த சில ஓவியங்களின் நம்பகத்தன்மை குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டதாக, ஆங்கில நாளிதழ் ஒன்றின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக பிட் அண்ட் ஹாமா் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499 (அவதூறு), 500-இன் (அவதூறுக்கான தண்டனை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிராக அந்தப் பத்திரிகையாளா்கள் தாக்கல் செய்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் அவா்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 (1)(ஏ)-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம். அதேவேளையில் ஊடகத்தில் பணியாற்றுவோா், குறிப்பாக முக்கிய பொறுப்பில் இருப்பவா்கள் செய்திகள், கருத்துகளை வெளியிடுவதில் மிகுந்த எச்சரிக்கை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தி, மனுதாரா்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தனா்.