பேபி அண்ட் பேபி விமர்சனம்: குழந்தை மாறிப் போனதுக்கு இவ்ளோ அக்கப்போரா? காமெடியாவது பாஸாகிறதா?
சென்னை விமான நிலையத்திலிருந்து கோவைக்குச் செல்வதற்காகக் கிளம்பும் சிவாவும் (ஜெய்), மதுரைக்குச் செல்வதற்காகத் தயாராகும் குணாவும் (யோகி பாபு) தங்களது மனைவி குழந்தையுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களது பயணம் ஆரம்பிக்க, சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும், குணாவின் பெண்குழந்தை சிவாவிடமும் மாறியிருப்பது தெரிய வருகிறது. வெளிநாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கும் இருவரையும் சில கட்டுப்பாடான அன்போடு வரவேற்கக் காத்திருக்கிறார்கள் அவர்களின் தந்தைகள். அதில் சிவாவின் தந்தை (சத்யராஜ்) தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசையும், குணாவின் தந்தை ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு பெண் வாரிசையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் குழந்தைகள் மாறிப்போனதை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள், இருவரின் குழந்தைகளும் பெற்றோரின் கைகளுக்கு எப்படி வந்து சேர்கிறது என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கிறது இந்த `பேபி அண்ட் பேபி'.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/cimw5ia8/Baby.jpeg)
தேவையில்லாத இடத்தில் மாஸ் ரியாக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் ஒட்டாத நடிப்பு, துருத்திக்கொண்டிருக்கும் மேக்கப் என ‘நடிகர் ஜெய்யை காணவில்லை’ என்று போஸ்டர் ஓட்டும் அளவிற்கு வேறு ஒரு ஆளாக சுமாரான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் நடிகர் விஜய் போலவே பாடி லாங்குவேஜை மிமிக் செய்வதெல்லாம் தேவையே இல்லாத ஆணி! கலாய் ஒன்லைனர் போடுவது, நக்கல் செய்வது என வழக்கமான கதாபாத்திரத்தில் யோகிபாபு. ஆனால், விரல்விட்டு எண்ணும் இடங்களில் மட்டுமே சிரிப்பு எட்டிப்பார்க்கிறது. சாய் தன்யா, பிரக்யா நாக்ரா ஆகிய இருநாயகிகளுக்கும் குழந்தையைக் காணவில்லை என்று அழுவதற்கு சில காட்சிகளும், பாடுவதற்கு ஒரு பாடலும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆண் வாரிசுக்கு அடம்பிடிக்கும் சத்யராஜின் நடிப்பில் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. தும்மினாலும் சகுனம் பார்க்கும் இளவரசு, ஒருசில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், தங்கதுரை, ஆனந்த் ராஜ், சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, விக்னேஷ் காந்த் என அடிஷனல் ஷீட் கேட்கும் அளவுக்கு ஆட்கள் இருந்தும், சிரிப்பு ஒரு பக்கம் கூட முழுதாக நிரப்பப்படவில்லை.
டி.இமான் இசையில் யுகபாரதியின் வரிகளில் ‘ஆராஅமுதே’ பாடலைத் தவிர மற்ற பாடல்கள் எதுவும் ரசிக்கும்படியாக இல்லை. பின்னணி இசையும் பெரிதாக வேலை செய்யவில்லை. டி.பி சாரதியின் ஒளிப்பதிவு, கே.ஆனந்தலிங்ககுமாரின் படத்தொகுப்பு ஆகியவை ஏதோ பத்து ஆண்டுகளுக்கு முன்பான மேக்கிங் உணர்வைத் தந்து படத்தின் பெரிய பலவீனமாக மாறியிருக்கிறது. ஓம் பிரகாஷின் சண்டைக்காட்சிகள் நன்றாக வடிவமைக்கப்பட்டாலும், ‘எதுக்கு…’ என்ற கேள்வியை மனதில் கொண்டுவராமல் இல்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/m6gqcymi/Baby-and-Baby.jpeg)
90-களில் வந்த பல நகைச்சுவை படங்களின் டெம்ப்ளேட்டான ஆள்மாறாட்ட கதையை, மீண்டும் அதே மாவில் அரைத்திருக்கிறார்கள். 'மாறிப்போன குழந்தையை ஒரே இரவில் சென்று மாற்றிவிட்டு வந்தால் என்ன?' என்ற கேள்வி குழந்தைக்குக் கூட வரும் என்பதால், அதன்பிறகு வரும் எந்த காட்சியும் மனதோடு ஒட்டவில்லை. அதேபோல ஸ்ரீமன் நடிப்பில் ஆண் குழந்தை பிறப்பதற்கான லேகியம் என்று வைக்கப்பட்ட காட்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன.
நடுவில் சேஷு வந்து போகும் ஒரு சில காட்சிகளும், இளவரசின் டைமிங்கும் சற்றே ஆறுதல் தருகின்றன. இடைவேளையில் சீரியஸாக குழந்தையைக் காணவில்லை என்று முடித்துவிட்டு, அதன் பிறகு தொடங்கிய காட்சிகளில் டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது, குழந்தையின் தந்தை ஆனந்தமாக ஜூஸ் குடிப்பது எல்லாம் 'இல்ல புரியல' ரக காட்சிகளே! வீடியோ காலில் தாலாட்டு, தனியாக வரும் தனியான ரொமான்டிக் போர்ஷன், எதற்காக நடக்கின்றன என்றே தெரியாத சண்டைக்காட்சிகள் ஆகியவை நம் பொறுமையைச் சோதிக்கின்றன.
மொத்தத்தில் கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் இருப்பவர்களைக் கூட, ‘இவ்ளோ மேல இல்லப்பா’ என்று சொல்லவைக்கும் இந்த 'பேபி அண்ட் பேபி', குழந்தைத்தனமான சினிமா!