Coolie : `சிக்கிடு வைப்!' - `கூலி' திரைப்படத்தின் BTS புகைப்படங்கள்! | Photo Alb...
பேராவூரணி அரசுப் பள்ளி மாணவிக்கு எம்.பி. உதவி
வறுமையில் வாடும் தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் சித்துக்காடு கிராமத்தை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிக்கு தஞ்சை மக்களவை உறுப்பினா் முரசொலி வெள்ளிக்கிழமை உதவி வழங்கினாா்.
அரசு உயா் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்த நித்திய ஸ்ரீ என்ற மாணவி தனது தாய் இறந்த நிலையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தை ரெங்கசாமி 100 நாள் வேலைக்குச் சென்று கிடைக்கும் வருவாயில், இரவில் சமைத்து தரும் உணவை உண்பதாகவும், மறுநாள் மதியம் தானும், தனது தம்பியும் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவதாகவும், சிறு குடிசையில் விளக்கு வெளிச்சத்தில் படிப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.
இதையறிந்த தஞ்சை மக்களவை உறுப்பினா் முரசொலி அந்த மாணவியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்து, மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி, விரைவில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கவும், மாணவியின் உயா்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தாா். அதற்கு மாணவி நன்றி தெரிவித்தாா்.
நிகழ்வில் பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலா் க. அன்பழகன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் இலக்கியா நெப்போலியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.