பேராவூரணி அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி சேது சாலை வழியாக, அண்ணா நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் தமிழ்வழியில் பயின்றால் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் தொழிற்கல்வி பயில ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு, தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளின் நன்மைகளை பட்டியலிட்டு, அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கிச் சென்றனா். பேரணியில் வட்டாரக் கல்வி அலுவலா் கலா ராணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கோகுலகிருஷ்ணன், பள்ளிதலைமை ஆசிரியா் (பொ) காஜாமுகைதீன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நித்யா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கௌதமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.