பேலந்தோர் விருதில் ரபீனியாவுக்கு 5-ஆவது இடமா? நெய்மர் கண்டனம்!
தங்கப் பந்து விருதுக்கான தரவரிசைப் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர் ஐந்தாம் இடம் பெற்றது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் கேப்டனும் சக பிரேசில் வீரருமான நெய்மர் இதனைக் கண்டித்து பதிவிட்டுள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற பேலந்தோர் (தங்கப்பந்து) விருதுக்கான தரவரிசைப் பட்டியல் இந்திய நேரப்படி நள்ளிரவுமுதல் வெளியாகின.
இந்த வரிசையில் முதலிடம் பிடித்து பேலந்தோர் விருதை வென்றது பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரர் உஸ்மானே டெம்பேலே.
பெரிதும் எதிர்பார்த்த ரபீனியாவுக்கு ஐந்தாவதும், லாமின் யமாலுக்கு இரண்டாவது இடமும் கிடைத்தன.
கடந்த சீசனில் முதல் பாதியில் இவருக்குத்தான் பேலந்தோர் எனப் பேசப்பட்டது. அதிகபட்சமாக கோல்கள், கோல்கள் அடிக்க உதவியதில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலிடம் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் டாப் 3-க்குள் கிடைத்திருக்க வேண்டுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சக பிரேசில் நாட்டு வீரரும் முன்னாள் பார்சிலோனா வீரருமான நெய்மர் ஒரு பதிவில், “ரபீனியாவுக்கு ஐந்தாவது இடம் என்பது மிகப்பெரிய ஜோக்...” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த சீசனில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு நிறத்தின் காரணமாக பேலந்தோர் விருது கிடைக்கவில்லை என சர்ச்சை எழுந்தது.
பிரேசில் வீரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா? எனவும் கால்பந்து ரசிகர்கள் தங்களது விமர்சனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.